காலிங்கராயன்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்: ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்

காலிங்கராயன்பாளையத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

Update: 2023-10-12 00:05 GMT

காலிங்கராயன்பாளையத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

மனுநீதிநாள் முகாம்

ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டா் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடும்பத்தலைவிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. உரிமைத்தொகை பெறாத தகுதியுள்ள பெண்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் மேல்முறையீடு செய்யலாம். தகுதியான பெண்கள் அனைவருக்கும் உறுதியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

நலத்திட்ட உதவிகள்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார். இதில் விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள், கடன் உதவிகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 125 பேருக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) வினய் மீனா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி தர்மராஜ், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காளான் வளர்ப்பு மையம்

முன்னதாக ஜெயராமபுரம், அவல்பூந்துறை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு நடத்தினார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, நோயாளிகளின் வருகை குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

இதேபோல் பேரோடு நொச்சிபாளையம் பகுதியில் அன்னை சத்யா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் செயல்படும் செக்கு எண்ணெய் தயாரிக்கும் ஆலையையும், கதிரம்பட்டி பாலாஜிநகரில் தாமரைக்கனி மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடத்தப்படும் காளான் வளர்ப்பு மையத்தையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்