கடலூரில் சாலையில் சுற்றித்திரிந்த 12 கால்நடைகள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கடலூரில் சாலையில் சுற்றித்திரிந்த 12 கால்நடைகளை மாநகராட்சி அதிகாாிகள் பறிமுதல் செய்தனா்.

Update: 2022-12-15 19:14 GMT

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்வதோடு, போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி உத்தரவின் பேரில் ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாபர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 12 மாடுகளை பிடித்து, பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி முழுவதும் ஆங்காங்கே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பறிமுதல் செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்