சிவகளை அகழாய்வில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு

சிவகளை அகழாய்வில் முதன்முதலாக தங்கப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.;

Update:2022-08-11 18:45 IST

ஏரல்:

சிவகளை அகழாய்வில் முதன்முதலாக தங்கப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சிவகளையில் அகழாய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலத்தாலான பொருட்கள், சங்கு பொருட்கள், நெல்மணிகள் போன்றவை கண்டறியப்பட்டது. தொடர்ந்து முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில், சிவகளை பராக்கிராமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதியிலும் அகழாய்வு பணிகள் நடைெபற்று வருகிறது. இதற்காக அங்கு 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கத்தாலான பொருள்

இந்த நிலையில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கத்தாலான பழங்கால பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1 செ.மீ. நீளமும், 30 மில்லி கிராம் எடையும் கொண்டதாக உள்ள தங்கப்பொருளில் மெல்லிய கோடுகளாக உள்ளது.

சிவகளை அகழாய்வில் முதன்முதலாக தங்கத்தாலான பொருள் கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-

வாழ்விட பகுதி

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் தங்கத்தாலான ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற அகழாய்விலும் தங்கத்தாலான காதணி கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர்களை புதைத்த இடத்தில் அங்கு தங்கப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

தற்போது சிவகளையில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெறும் அகழாய்வில் முதல் முதலாக தங்கத்தாலான பொருள் கண்டறியப்பட்டுள்ளது. அது சிதைந்த நிலையில் உள்ளதால், பழங்காலத்தில் அதனை ஆபரணமாக பயன்படுத்தினரா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் இப்பகுதியில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்பும் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு செங்கலும் 25 சென்டி மீட்டர் நீளமும், 16 செ.மீ. அகலமும், 5 செ.மீ. உயரமும் கொண்டதாக உள்ளது.

இதுதவிர சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்ட சில்கள், நூல் நூற்க பயன்படும் தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசிமணிகள், வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனை கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்