கடமலைக்குண்டுவில்வணிக வளாக பூட்டை உடைத்து திருட முயற்சி

கடமலைக்குண்டுவில் வணிக வளாக பூட்டை உடைத்து திருட முயன்றவர்களை போலீசாா் தேடி வருகின்றனர்.;

Update:2023-07-12 00:15 IST

கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. இவர், கடமலைக்குண்டு கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர், கடை நடத்தி வரும் அதே வணிக வளாகத்தில் மேலும் பல கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் உரிமையாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் வணிக வளாகத்தின் மெயின் கதவு பூட்டப்பட்டது. இந்நிலையில் அதிகாலையில் பிச்சை டீ குடிப்பதற்காக கடமலைக்குண்டுவிற்கு வந்தார்.

அப்போது அவர் கடை நடத்தி வரும் வணிக வளாகத்தின் மெயின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கடைகளில் பூட்டு ஏதும் உடைக்கப்படாமல் இருந்தது. இதனால் திருட்டு முயற்சி நடப்பதை அறிந்த அவர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று முன்தினம் இரவில் 3 வாலிபர்கள் வணிக வளாகம் அருகே சுற்றித்திரியும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்