ஆண்டிப்பட்டியில்குப்பைகள் தீ வைத்து எரிப்பு

ஆண்டிப்பட்டியில் குப்பைகளை தீ வைத்து எரித்ததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-15 18:45 GMT

ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார 200-க்கும் மேற்பட்ட கிராமங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மையப் பகுதியாக நகர் பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளில் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகள் ஆண்டிப்பட்டி பேரூராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் உரங்கள் தயாரிப்பு, மறுசுழற்சிக்கு தேவையான குப்பைகள் மட்டும் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். மற்ற குப்பைகளை 5-வது வார்டு குமாரபுரம், சுடுகாடு பகுதி மற்றும் சக்கம்பட்டி, வைகை அணை சாலை ஓரத்தில் பணியாளர்கள் கொட்டி வருகின்றனர்.

அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அதிகம் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக பேரூராட்சி பணியாளர்கள் அடிக்கடி தீ வைத்து எரித்து வருகின்றனர். குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் வைகை அணை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த புகையால் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். எனவே குப்பைகளை குடியிருப்புகள் இல்லாத இடத்தில் கொட்டி பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்