கொலை முயற்சி வழக்கில்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை:தேனி கோர்ட்டு தீர்ப்பு

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-01-25 18:45 GMT

கொலை முயற்சி

கடமலைக்குண்டு அருகே மூலக்கடையை சேர்ந்தவர் பசும்பொன் (வயது 52). கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). அவரும் கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி, அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ், வேல்முருகன் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த பசும்பொன், அவருடைய அண்ணன் மாயி ஆகிய இருவரும் தகராறை விலக்கிவிட்டனர்.

அப்போது அங்கு வந்த சுரேஷ், நாகராஜூக்கு ஆதரவாக செயல்பட்டு பசும்பொன்னிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். அன்று இரவு பசும்பொன் அதே பகுதியில் ரேஷன் கடை முன்பு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் ஒரு கல்லை தூக்கி பசும்பொன் மீது போட்டு அவரை கொலை செய்ய முயன்றார்.

5 ஆண்டு சிறை

இதில் அவருடைய இடதுபக்க முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த பசும்பொன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சுந்தரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கொலை முயற்சி வழக்கில் சுரேசுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து சுரேசை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்