போடியில்மோட்டார்சைக்கிளை திருடிய வாலிபர் கைது
போடியில் மோட்டார்சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
போடி குப்பநாயக்கன்பட்டி கரட்டுப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 36). அரசு பள்ளி ஆசிரியர். இவர், அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ேமாட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடிய மர்மநபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை போடி போஜன் பார்க் அருகே தேவேந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது திருடுபோன அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வந்தார். இதையடுத்து அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், போடி ஆட்கொண்டான் தெருவை சேர்ந்த மணிராஜா (32) என்பதும், மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.