சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக மனு
கரூர் சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், விஜய் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.;
சேலம்,
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.
அதன்படி சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தைதொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், இன்று சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அடுத்த மாதம் 4 ஆம் தேதி பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. விஜய் பிரசாரத்திற்காக போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு தவெக மனு அளித்துள்ளது.