திருச்செந்தூர் பகுதியில் ஊடு மின்கம்பம் நடும் மேளா
திருச்செந்தூர் பகுதியில் ஊடுமின்கம்பம் நடும் மேளாவில் நேற்று ஒரே நாளில் 166 மின்கம்பங்கள் நடப்பட்டன.;
திருச்செந்தூர் பகுதியில் ஊடுமின்கம்பம் நடும் மேளாவில் நேற்று ஒரே நாளில் 166 மின்கம்பங்கள் நடப்பட்டன.
சீரான மின்சாரம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கு. குருவம்மாள் வழிகாட்டுதலின்படி தடையில்லா சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து உயர் அழுத்த மின் பாதைகளில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே பலத்த காற்றின்போது, போதிய இடைவெளி இல்லாமல், மின் ஒயர்களுக்கிடையே இடைவெளி குறைவதால் மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு கருதியும், இருமின் கம்பங்களுக்கிடையே ஊடுமின்கம்பம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊடு மின்கம்பம் நடும் மேளா
அதன்படி திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தலைமையில், திருச்செந்தூர் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் முன்னிலையில், அனைத்து பிரிவு அலுவலர்களின் கூட்டு முயற்சியால், அனைத்து பணியாளர்களின் ஒத்துழைப்புடன் நேற்று ஊடு மின்கம்பம் நடும் மேளா நடந்தது. இதில் ஒரே நாளில் 166 மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் அலுவலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் 6 மின்கம்பங்களும், காயமொழி 15, பரமன்குறிச்சி 7, ஆறுமுகநேரி 10, காயல்பட்டினம் 10, குரும்பூர் 10, நாசரேத் 13, மெஞ்ஞானபுரம் 15, ஆழ்வார்திருநகரி 11, சாத்தான்குளம் நகர் 12, சாத்தான்குளம் கிராமம் 10, பழனியப்பபுரம் 7, உடன்குடி நகர் 10, உடன்குடி கிராமம் 10, படுக்கப்பத்து 10, நடுவக்குறிச்சி 10 ஆக மொத்தம் 166 மின்கம்பங்கள் ஒரே நாளில் நடப்பட்டு உள்ளன.