மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு : அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Update: 2022-12-31 16:12 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கடந்த 3-ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.500ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 56 லட்சம் கூடுதல் செலவாகும்.

மேலும், தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கவும், இது 2022 டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி, 2023ல் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500க்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்