மகனை ஆணவ கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை ஆணவ கொலை செய்த தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல வெட்டு காயம் அடைந்த மருமகளும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-04-16 20:48 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதியை சேர்ந்தவர் தையல் தொழிலாளி தண்டபாணி (வயது 50). இவருடைய மகன் சுபாஷ் (25). இவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து கடந்த மாதம் 27-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தண்டபாணி நேற்று முன்தினம் சுபாசை வெட்டிக்கொலை செய்தார். அப்போது தடுக்க வந்த தன்னுடைய தாயார் கண்ணம்மாளையும் வெட்டிக்கொன்றார். மேலும் மகனை காதல் திருமணம் செய்த மருமகளையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த நிலையில் அவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அனுசுயாவை, ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு நேற்று முன்தினம் இரவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இரட்டை கொலை செய்துவிட்டு தலைமறைவான தண்டபாணி நேற்று முன்தினம் இரவு கழுத்தை அறுத்து தறகொலைக்கு முயன்றார். ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த அவரை, போலீசார் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்ததும், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சுபாஷ், பாட்டி கண்ணம்மாளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து தண்டபாணியின் மனைவி சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அருணகிரி சுடுகாட்டில் 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

அனுசுயா, மாஜிஸ்திரேட்டிடம் 2 மணி நேரம் வாக்குமூலம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயாவிடம் வாக்குமூலம் பெற, சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தங்ககார்த்திகா நேற்று காலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அனுசுயாவிடம் நடந்த சம்பவங்கள் பற்றி சுமார் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட்டு தங்ககார்த்திகா வாக்குமூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்