860 ஊராட்சிகளிலும் இணையதள வசதி

பாரத் நெட் திட்டம் பகுதி 2-ன் மூலம் 860 ஊராட்சிகளிலும் இணையதள வசதி இணைக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-22 13:00 GMT


பாரத் நெட் திட்டம் பகுதி 2-ன் மூலம் 860 ஊராட்சிகளிலும் இணையதள வசதி இணைக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இணையதள வசதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் இணைய தள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம் பகுதி - 2 தமிழ்நாடு கண்ணாடி இழை வலை அமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிவு பெறும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 860 கிராம ஊராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட உள்ளது.

கண்ணாடி இழையானது தரை வழியாகவும், மின் கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேவை மையம்

இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் உள்ள அறை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடும் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற செயலாளர் அரசாணையின் படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.

இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இணையதள வசதி மூலம் பெறப்படும் தமிழ்நாடு அரசு இணையதள சேவைகளை ஊரக பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஊராட்சியிலேயே முழுமையாக பெற இயலும்.

கடும் நடவடிக்கை

ஒவ்வொரு ஊராட்சியிலும் டான்பிநெட் உபகரணங்கள் (மின்கலன், இன்வெட்டர், ரூட்டர் மற்றும் கண்ணாடி இழை) தமிழ்நாடு அரசின் உடைமையாகும்.

இவைகளை சேதப்படுத்தும் அல்லது களவாடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்