பெண் கொலையில் வாலிபரிடம் விசாரணை

கோவை பீளமேடு பெண் கொலையில் வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.;

Update:2023-07-31 01:30 IST

பீளமேடு

கோவை பீளமேடு பெண் கொலையில் வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பெண் கொலை

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருடைய மனைவி ஜெகதீஷ்வரி (வயது 40). கடந்த 24-ந் தேதி சக்கரவர்த்தி பெயிண்டிங் வேலை விஷயமாக கோவை மாவட்டம் அன்னூருக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார். இதனால் வீட்டில் ஜெகதீஷ்வரியும், அவரது மகளும் மட்டுமே தனியாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் தன்னை அழைக்க தாய் வராததால், ஜெகதீஷ்வரியின் மகள் நடந்தே வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீடு திறந்த நிலையில் இருந்ததால், பதற்றத்துடன் அவர் வீட்டின் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் ஜெகதீஷ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஜெகதீஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபரிடம் விசாரணை

ஜெகதீஷ்வரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதுடன், அவரது கழுத்தில் அணிந்து இருந்தது மற்றும் வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. எனவே நகைக்கு ஆசைப்பட்டு ஜெகதீஷ்வரியை கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவம் நடந்த அன்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

காரணம் என்ன?

பீளமேடு பெண் கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த நபர்கள், மேலும் நீண்ட நேரம் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் என பல்வேறு வகைகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள செல்போன் டவர்களில் கொலை நடந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்கள், ஜெகதீஷ்வரி பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொலை நகைக்காக நடத்தப்பட்டதா? அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்