வீடுகளுக்கு தீ வைப்பு, மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவம்:மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

Update:2023-03-24 00:15 IST

பரமத்திவேலூர்:

வீடுகளுக்கு தீ வைப்பு, மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்கு தீ வைப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 57). வக்கீலான இவர் அந்த பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தங்க வசதியாக ஆலை பகுதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு இருந்தன. மேலும் டிராக்டர்களை நிறுத்த ஓலையால் கொட்டகைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. ஹோலி பண்டிகை மற்றும் ஆலையில் வேலை இல்லாததால், வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி நள்ளிரவு வீடுகளுக்கும், டிராக்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த கொட்டகைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 10 வீடுகளும், 3 டிராக்டர்களும் தீயில் எரிந்து சேதமாகின. மேலும் தீயை அணைக்க முயன்ற வக்கீல் துரைசாமியும் காயமடைந்தார்.

மண்எண்ணெய் குண்டு

இதேபோல் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (55) என்பவரது வீட்டுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் வீட்டில் இருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30 ஆயிரம் ரொக்கம், பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்டவை தீயில் கருகின.

மேலும் வடகரையாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் மண்எண்ணெய் பாட்டில் குண்டுகளை வீசினர். இதில் அவருடைய வீடு சேதமானது. ஒரே நாளில் நடந்த இந்த தொடர் சம்பவங்களை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

3 தனிப்படைகள்

மேலும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் வீடுகளுக்கு தீ வைப்பு மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றம்

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படையினர், தீ வைப்பு, குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களில் ஜேடர்பாளையம் பகுதியில் 4 தீ வைப்பு சம்பவங்களும், ஒரு மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவமும் நடந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்