சர்ச்சை வீடியோ விவகாரம்: மருத்துவ இயக்குநரிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்ட இர்பான்

மன்னிப்பு கோரினாலும் இர்பான் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-05-22 13:31 GMT

சென்னை,

"இர்பான் வியூஸ்' என்ற யூடியூபில் உணவுத் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்ஸை வைத்திருப்பவர் இர்பான். பிரபல யூடியூபரான இவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை அறிந்துகொண்டு, அதை எல்லோருக்கும் அறிவித்து, அந்தக் கொண்டாட்டத்தையே வீடியோவாக வெளியிட்டிருந்தார். கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்வது இந்தியாவில் PC-PNDT ACT 1994-ன்படி கடுமையான குற்றம் என்பதால் அந்த வீடியோ சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட வீடியோ தொடர்பாக இர்ஃபான் மீதும், கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடுவர்கள் மீதும், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீதும் இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தனக்குப் பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் மன்னிப்பு கோரினார். சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் இர்பான் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இர்பான் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்குழு தெரிவித்தது.

இந்தநிலையில், மருத்துவ இயக்குநரிடம் நேரில் சென்று இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரை நேரில் சந்தித்து தான் செய்த தவறுக்கு கடிதம் எழுதி கொடுத்து மன்னிப்பு கோரியதாகவும் இர்பானின் மன்னிப்பு கடிதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

3 மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட இர்பான் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு காணொலியை வெளியிட வேண்டுமென நிபந்தனை விதித்ததாகவும்,  நிபந்தனையை ஏற்றுக்கொண்ட இர்பான் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வீடியோ வெளியிடுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.  இர்பான் விவகாரத்திற்கு விரைவில் சுகாதாரத்துறை முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்