உடுமலை பகுதியில் அதிகரிக்கும் களைக்கொல்லி பயன்பாடு

Update:2022-09-19 21:09 IST


உடுமலை பகுதியில் களைக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களைக்கொல்லிகள்

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இந்தநிலையில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன.எனவே களைக்கொல்லிகளின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க வேண்டும், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது'நமது பாரம்பரிய விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாடு முற்றிலுமாக இல்லை.மண்ணை வளமாக்க மாட்டுச்சாணம், ஆட்டுரம் போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்தினார்கள்.அதுமட்டுமல்லாமல் அவர்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை.மாறாக பூச்சி விரட்டிகளையே பயன்படுத்தினர்.எல்லாவற்றுக்கும் மேலாக களைக்கொல்லிகளின் பயன்பாடு என்பது நமது முன்னோர்கள் காலத்தில் அறவே இல்லாத ஒன்றாகும்.

கால்நடை தீவனம்

நிலத்தை நன்கு உழும்பொழுது பெருமளவு களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.புல் போன்ற களைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகி விடும்.மீதமுள்ள களைகளை கூலி ஆட்கள் மூலம் அகற்றுவார்கள்.ஆனால் தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையால் முழுவதுமாக களைக்கொல்லிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.அதிலும் தடை செய்யப்பட்ட, வீரியம் மிக்க களைக்கொல்லிகள் பலவும் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது.இத்தகைய களைக்கொல்லிகள் படிப்படியாக மண்ணுக்குள் ஊடுருவி மண் வளத்தைப் பாதிக்கிறது.அத்துடன் நிலத்தடி நீர் மாசடைவதற்கும் காரணமாகிறது.மேலும் பல பகுதிகளில் காற்றில் பறக்கும் களைக்கொல்லிகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.சில வேளைகளில் அருகிலுள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும் பாதிக்கிறது.தற்போது விவசாயப் பயன்பாட்டில் மட்டுமல்லாமல் சாலையோரங்களில் வளரும் களைச்செடிகளை அகற்றுவதற்கும், வீடுகள், பள்ளிகள் மற்றும் அலுவலக வளாகங்களில் வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதற்கும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.இது கால்நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு தருவதாக மாறி விடும் அபாயம் உள்ளது.எனவே களைக்கொல்லிகளின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்'என்று இயற்கை ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்