கதி கலங்க வைக்கும் கியாஸ் சிலிண்டர் விலை
கதி கலங்க வைக்கும் கியாஸ் சிலிண்டர் விலை குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.;
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று முதல் ரூ.50 உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.351 அதிகரித்தது.
இதுகுறித்து இல்லத்தரசிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மக்களுக்கு அதிர்ச்சி
விருதுநகரை சேர்ந்த இல்லத்தரசி ரோகிணி:-
இல்லத்தரசிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வீட்டு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1118.50 கொடுக்க வேண்டிய நிலையில் வினியோகிக்க வருபவர்களுக்கும் உதவி செய்யும் நிலையில் சிலிண்டரின் விலை ரூ. 1,200-ஐ எட்டி விடும்.
மேலும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் உணவு விடுதிகளில் உணவுப்பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு ஏற்பட்டு விடும். மொத்தத்தில் மத்திய அரசு ஒருபுறம் இலவச சிலிண்டர் வினியோகம் என்று கூறிவரும் நிலையில் மறுபுறம் இம்மாதிரியாக தொடர்ந்து விலையை அதிகரிப்பது ஏற்புடையதல்ல.
அடிக்கடி உயர்வு
ஆலங்குளத்தை சேர்ந்த லீலாவதி:- கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவது ஏழை மக்களை மிகவும் பாதிக்கும். மீண்டும் விறகு அடுப்பிற்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
சிலிண்டர் விலை உயர்வினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சிலிண்டர் விலை ஏற்றம் ஒரு புறம், சிலிண்டர் கொண்டு வந்து போடும் ஊழியர்களுக்கு பணம் மற்ெறாரு புறம் என பல முனை தாக்குதல்களை இல்லத்தரசிகள் சந்திக்க வேண்டி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விறகு அடுப்பு
வத்திராயிருப்பை சேர்ந்த இல்லத்தரசி பத்மா:- தற்போது மத்திய அரசு நாளுக்கு நாள் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அன்றாட கூலிவேலை செய்யும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1,200 கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு்ள்ளது.
விலை உயர்ந்து கொண்டே சென்றால் மீண்டும் விறகு அடுப்பிற்கு நாங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானியம் இல்லை
பாளையம்பட்டி மேல தெருவை சேர்ந்த இல்லத்தரசி சுந்தரி:-
தற்போது அனைத்து வீடுகளிலும் கியாஸ் அடுப்பு மூலமாகவே சமையல் செய்யப்படுகிறது. கியாஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை என கூறலாம். ஆனால் தற்போது அடிக்கடி சிலிண்டர் விலை உயர்வால் நடுத்தர குடும்பத்தினர், ஏழை மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். ஒரு சில மாதங்களில் சரியான முறையில் மானியமும் வழங்கப்படுவதில்லை.
இந்தநிலையில் தற்போது சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு என்பது இல்லத்தரசிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
வியாபாரிகள் பாதிப்பு
ராஜபாளையத்தைச் சேர்ந்த வியாபாரி கிறிஸ்டோபர்:- எங்களை போன்ற சிறு வியாபாரம் செய்து தொழில் நடத்தி வருபவர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை சிலிண்டர் விலை உயர்ந்து வருவது கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் தான் கடைகளை நடத்தி வருகிறோம். இந்த விலை உயர்வால் எங்களை போன்ற வியாபாரிகள் மீள முடியாத நிலையில் உள்ளோம். அதேபோல டீக்கடை நடத்தி வருபவர்கள் சிலிண்டர் தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் விலை ஏறிக் கொண்டே போனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும். வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.