பால் உற்பத்தியாளர் கூட்டுறவு பணியாளர் பதவி உயர்வு முறைகேடு: விசாரணை அறிக்கையுடன் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பதவி உயர்வு பட்டியல் தயாரித்ததில் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையுடன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-19 19:45 GMT


பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பதவி உயர்வு பட்டியல் தயாரித்ததில் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையுடன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

முறைகேடு வழக்கு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 2016-ம் ஆண்டில் பல்வேறு பணியாளர்கள் பதவி உயர்வு பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி நானும் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தேன். ஆனால் பதவி உயர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. இந்த பட்டியலை தேர்ந்தெடுத்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன.

எனவே அந்த பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்து, தகுதியான நபரான எனக்கும் உரிய பதவி உயர்வு வழங்கி பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அறிக்கையுடன் ஆஜராகுங்கள்

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தெரிவித்ததைப்போல பதவி உயர்வு பட்டியலில் முறைகேடு நடந்ததாக சந்தேகம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக மதுரை மாநகர போலீஸ் கமிஷனரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இதுவரை எந்த அறிக்கையையும் அவர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனுதாரர் விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையுடன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் வருகிற 23-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்