மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்: "தாலி மேல சத்தியமா என்னோட காசு" கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி..!

கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-08 03:27 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி, காங்குப்பம் கிராமம், மகாதேவமலைக்கு செல்லும் வழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ் என்பவர் வீடு உள்ளது. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடராஜ் வீட்டுக்கு ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அந்த வீடு பூட்டி இருந்தது.

அதிகாரிகள் பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், மண்டல துணை தாசில்தார் பிரகாசம், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டுக் கதவை திறக்க மணிக் கணக்கில் காத்திருந்தனர்.

இரவு 11.30 மணிக்கு மேலும் கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாடியில் உள்ள ஒரு அறையில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரூ.7 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால் மூதாட்டி மாடியில் இருந்த பணம் என்னுடையது அல்ல; தரை தளத்தில் இருந்ததே என்னுடைய பணம்; தாலி மேல சத்தியமா என்னோட காசு என போலீசாரிடம் ஆவேசமாக கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்