மாசி மக திருவிழா
திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே நந்தி கோவில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக திருவிழா, கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முக்கிய நிகழ்வாக கடந்த 1-ந்தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து 4 ரத வீதிகளில் சுவாமி-அம்பாள், 63 நாயன்மார்கள் வீதி உலா வந்தனர்.
தேரோட்டம்
இதைத்தொடர்ந்து நேற்று ேதரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்கள். காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மலைக்கோட்டையை சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மாசி மகத்தையொட்டி காலை 11 மணிக்கு நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், இரவில் விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். 8-ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. மாலை பிச்சாண்டவர் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.