"நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மீண்டும் உயிரூட்டப்படும்"- சபாநாயகர் அப்பாவு தகவல்

“நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மீண்டும் உயிரூட்டப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2023-04-25 20:10 GMT

நாங்குநேரி:

"நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மீண்டும் உயிரூட்டப்படும்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சிறப்பு பொருளாதார மண்டலம்

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேற்று வருகை தந்தார். அவருக்கு தொழில் முனைவோர் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களையும் பார்வையிட்டார். தொழில் முனைவோர்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு சாலை, தண்ணீர், மின்சாரம், இணையதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என புகார் தெரிவித்தனர். பின்னர் தொழில் நிறுவன அதிகாரிகளுடன் சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார்.

அப்பாவு பேட்டி

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. முதலில் அட்மாக் என்ற அமெரிக்க நிறுவனம் நிர்வகித்தது. பின்னர் அவர்கள் ஏ.ஆர்.எம்.எல். என்ற மேற்கு வங்க நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டனர். இவர்கள் 855 கோடி ரூபாயை நிதியை பெற்று எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு எந்த வித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.

உயிரூட்டப்படும்

இங்கு தொழில் நடத்தி வருபவர்களுக்கு சாலை வசதி, குடிதண்ணீர், மின்விளக்குகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என தெரிவித்துள்ளனர். தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர், மற்றும் தொழில்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்.

எனவே நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கி உள்ளவர்கள் தைரியமாக தொழில் செய்யுங்கள், உங்களுக்கு முதல்-அமைச்சர் பாதுகாப்பாக இருப்பார். கலைஞரின் கனவு திட்டமான இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் எக்ஸல் நிறுவன மேலாளர் வரதராஜன், தொழில் முனைவோர் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்