தாளவாடி அருகே நூதன முறையில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி; 2 பேர் கைது

தாளவாடி அருகே நூதன முறையில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-08 21:32 GMT

தாளவாடி

தாளவாடி அருகே நூதன முறையில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி வாங்கினர்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தில் சரக்கு வாகனத்தில் வெங்காயம் விற்பனை செய்து கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ரேஷன் அரிசி வாங்குவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரக்கு வாகனத்தில் வெங்காயம் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த பாசில் பாட்ஷா (வயது 43), அசிபுல்லா (39) ஆகியோர் என்பதும், இவர்கள் மெட்டல்வாடி கிராமத்துக்கு சரக்கு வாகனத்தில் சென்று நூதன முறையில் ஒவ்வொரு வீட்டிலேயும் சின்ன வெங்காயத்தை விற்பது போல் நடித்து, அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் பதுக்கி வைத்து விற்பனைக்காக கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 கிலோ ரேஷன் அரிசி, அவற்றை பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட 6 பிளாஸ்டிக் டப்பாக்கள், சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவற்றுடன் 2 பேரும் குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்