தமிழகத்தில் நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டு வருகிறது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;

Update:2023-08-27 00:30 IST
கோவை, ஆக.27-


தமிழகத்தில் நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டு வருகிறது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


நீர்நிலை பாதுகாப்பு


தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


கோவை நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. அதை பார்வையிட உள்ளேன். நீர்நிலைகள் பாதுகாக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். சந்திராயன்-3 வெற்றிக்கு பிரதமா் அளித்த ஊக்கம் தான் காரணம்.


கவர்னர்கள் யாரும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. ஒரு மசோதாவை கவர்னர் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.


ஏற்றுக்கொள்ள முடியாது


இதுபோன்ற காரணங்களுக்காக கவர்னர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ் எந்த பிரச்சினை இருந்தாலும் முதல்-அமைச்சர், கவர்னரை சந்தித்து விவாதங்களை நடத்தி முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்கு பதில் விமர்சனத்தை தான் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்- அமைச்சர்.


கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் கவர்னரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் பேசவில்லை. மாற்றுக்கருத்து இருந்தாலும் தோழமையுடன் பழக வேண்டும் என்ற கருத்தை மாணவர்களிடம் சொல்ல வேண்டும்.


கவர்னர் குறித்து விமர்சனங்கள் செய்யகூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கட்டளையிட வேண்டும். அதே போல் கருத்தால் மோத வேண்டுமே தவிர கருப்பு கொடியால் மோதக்கூடாது.


நீட் தேர்வு அரசியல்


ஆரம்பம் முதல் நீட் தேர்வை நான் ஆதரித்து வருகிறேன். தமிழகத்தில் நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.

இந்திய அளவில் கல்விக் கொள்கை உள்ள போது தமிழகத்திற்கான கல்விக் கொள்கை எதற்கு? புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களில் ஒன்றான கல்வியோடு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற அம்சத்தை தான் காலை உணவு திட்டமாக தமிழக முதல்-அமைச்சர் அமல்படுத்தி விளம்பரம் செய்துள்ளார்.


தேசிய கல்விக்கொள்கையின் அம்சங்களை எடுத்து மாநில கல்விக் கொள்கை என சொல்கின்றனர். கச்சத் தீவில் இருந்து கல்வி வரை அனைத்தையும் தாரை வார்த்துவிட்டு, இப்போது மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும் என கூறுவது சரியல்ல.


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்