வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: பதற்றம் தணிந்துள்ளது - கோவையில் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-09 07:30 GMT

கோவை,

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்கள், வீடியோ பற்றி நேரில் ஆராய்ந்து அறிய பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 பேர் அடங்கிய உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான பதற்றம் தற்போது தணிந்துள்ளது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவைகள் மூலமாக இந்த பதற்றம் தணிந்துள்ளது. காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூழ்நிலை தற்போது நலமாக இருக்கிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. வதந்திகள் பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்துள்ளோம். சிலரை கைது செய்வதற்கு போலீசார் குழு பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளனர். ஒரு சிலர் தலைமறைவாகியுள்ளனர். சிலர் கோர்ட்டை நாடி உள்ளனர். பெருமளவில் வதந்தி வீடியோக்கள் குறைந்துள்ளது. இருந்தாலும் இது ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கும் என்பதால் வட மாநில தொழிலாளர்களுடன் அடிக்கடி உரையாடல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொழிலதிபர்களிடம் கூறியிருக்கிறோம்.

காவல்துறை அதிகாரிகளும் அவர்களிடம் சென்று பேசி அவர்களுக்கு தைரியம் கொடுத்துள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடி கேமராக்கள் வைக்கவும் ரோந்து வாகனங்கள் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட மாநில தொழிலாளர்களின் பெற்றோர், உறவினர்களுக்கு இங்குள்ள சூழலை விளக்கவும் அவர்களுக்கு புரியும் வகையிலும் அவர்களது மொழியில் தகவல் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன் இது போன்ற போலி வீடியோக்கள் பரப்பப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்.

இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்