வெண்ணாற்றில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெண்ணாறு
திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து திருநெல்லிக்காவல், புதூர், விளத்தூர், கொத்தங்குடி, அம்மனூர், வல்லம், கச்சனம், ஐயர்கொத்தங்குடி, ஆலத்தம்பாடி, பொன்னிறை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் வெண்ணாறு உள்ளது. இந்த ஆறு தூர்வாரப்படாமல் உள்ளதால், ஆற்றின் கரையோரம் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மண்டி கிடப்பதால் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயி மாடு மேய்க்க சென்ற போது ஆற்றில் உள்ள கருவேல மரங்களின் வேர்களில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர்.
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
ஆனால் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் வளர்ந்து தடையாக உள்ளன. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வெண்ணாற்றில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள கருவேல மரங்களை அகற்றி ஆற்றை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.