“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் - நயினார் நாகேந்திரன்

அரசு காப்பகங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-08 16:16 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுக் காப்பகங்களைச் சேர்ந்த சிறுமிகள் தொடர்ந்து மாயமாகி வருவதாகவும், தப்பியோடுவதாகவும் வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த அச்சத்தையும் நம்முள் தோற்றுவிக்கின்றன.

ஆண்டுதோறும் போக்ஸோ வழக்குகள் பெருகிவரும் திமுகவின் ஆட்சியில், அரசுக் காப்பகங்களில் இருந்து காணாமல் போன குழந்தைகள் பாலியல் தொழில்களுக்காகக் கடத்தப்பட்டனரா? இதில் காப்பகக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா? அல்லது காப்பகத்தின் கொடுமை தாங்காமல் குழந்தைகள் ஓடிவிட்டனரா உள்ளிட்ட பல கேள்விகள் நம் மனதை அரிக்கின்றன.

காரணம், ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய அரசுக் காப்பகங்கள், திமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், தரமான உணவு வழங்காததாலும், சாதிரீதியான தாக்குதல்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் பெருகிவிட்டதாலும் அச்சுறுத்தும் கூடங்களாக மாறிவிட்டன என்பதை சமீபத்திய செய்திகள் நமக்கு உணர்த்தி வருகின்றன. நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த இவ்விவகாரத்தை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். எனவே, தமிழகப் பிள்ளைகள் அனைவரும் தன்னை “அப்பா” என்றழைக்க வேண்டும் என ஆசைப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காப்பகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்