அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

Update: 2023-07-09 20:00 GMT

ஊட்டி

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான எஸ்.கே.பிரபாகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்களிடம் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, கேட்டறிந்தார். அதன் பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், மழையினால் வீடு சேதமடைந்த நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்கள்

நிவராண முகாம்களில் பொதுமக்கள் தங்கும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில், அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் மணல் மூட்டைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தனப்ரியா, மணிகண்டன் (வளர்ச்சி), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், நகராட்சி பொறியாளர் சேர்மாகனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்