கம்பத்தில்சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கொடி, பலகை சேதம்:நடவடிக்கை கோரி போலீசில் புகார்

கம்பத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பலகை, கொடியை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

Update: 2023-10-06 18:45 GMT

கம்பம் வாரச்சந்தை அருகே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் முன்பு ஆட்டோ நிறுத்தத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பலகை, கொடி கம்பம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை தொழிற்சங்க பலகை, கொடி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதைக்கண்ட ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், கம்யூனிஸ்டு கட்சி நகர நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆட்டோ நிறுத்தம் முன்பு தொழிற்சங்கத்தினர் திரண்டனர். பின்னர் கொடியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி, நகர சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் மோகன் தலைமையில் ஆட்டோ நிறுத்த தலைவர் மனோகரன், கம்யூனிஸ்டு கட்சி நகர தலைவர் லெனின் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் வந்த அவர்கள் இன்ஸ்பெக்டர் லாவண்யாவிடம் புகார் கொடுத்தனர். அப்போது தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசிய இன்ஸ்பெக்டர், கொடி மற்றும் சங்க பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்