மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி; அமைச்சர் முத்துசாமி பேட்டி

மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார்.

Update: 2023-07-23 20:55 GMT

மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கொல்லம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னா் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது திட்டத்தின் தொடக்க இடத்தில் விவசாயிகளிடம் இடம் வாங்காத காரணத்தினால் காலதாமதம் ஏற்பட்டது. முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தொடக்க காலத்தில் பிரச்சினை இருந்தது. இது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு சரிசெய்யப்பட்டது. தற்போது முதியோர் உதவித்தொகை கிடைக்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கும் வகையில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். தண்ணீர் திறக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் மூலமாக...

டாஸ்மாக் மதுபான கடைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த 2 மாத காலஅவகாசம் தேவைப்படுகிறது. முதல்கட்டமாக தொழிலாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்படும். இதுதொடர்பாக 18 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒரு வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். டாஸ்மாக் மதுபான கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கு தொழில்நுட்ப கருவிகள் வாங்க வேண்டும் என்பதால், காலஅவகாசம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்