எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் சார்பில் உழவர் வயல்வெளி பள்ளி தொடக்க விழா

Update: 2022-09-28 18:45 GMT

கிருஷ்ணகிரி:

எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் மூலம், தென்னை சாகுபடி பற்றிய உழவர் வயல்வெளி பள்ளி தொடக்க விழா பழனம்பாடியில் நடந்தது. பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் தலைமை தாங்கி பேசுகையில், வயல் வெளிப்பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சியில் வழங்கப்படும் தொழில் நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்து, தென்னை சாகுபடியில் ஊடுபயிர் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், 14 வாரம் நடத்தப்படும் இந்த வயல்வெளி பள்ளியில், தென்னை சாகுபடியில் விதை தேர்வு முதல் சந்தை படுத்துதல் வரை தொழில் நுட்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

காவேரிப்பட்டணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, தென்னை சாகுபடியில் உர மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியர் பிரபு, வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் செந்தில்குமார், குணசேகர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்