அரசிடம் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும்

Update:2023-06-05 22:38 IST


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூரை சேர்ந்த உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வைத்துள்ளோம். இந்த நிலையில் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரா, ராஜேஷ், ரத்தன் ஆகியோர் நிறுவனம் வைத்துள்ளதாகவும், எங்களிடம் ஆடைகளை மொத்தமாக வாங்கி வர்த்தகம் செய்து வந்தனர். கடந்த 4 மாதமாக ஆர்டர் கொடுத்ததற்காக எங்களுக்கு பின்தேதியிட்ட காசோலை வழங்கினார்கள். அதை வங்கியில் மாற்றியபோது பணம் இல்லாமல் திரும்பியது.

திருப்பூரில் 60-க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் ரூ.9½ கோடிக்கு மோசடி செய்தது தெரியவந்தது. நாங்கள் வங்கிக்கடன் பெற்று தொழில் செய்து வருகிறோம். இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் முதலீடுகளை இழந்து தவிக்கிறோம். எங்களுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்