வேலூர் பெரியார் பூங்காவில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி
வேலூர் பெரியார் பூங்கா திடலில் நடந்த தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.;
வேலூர் பெரியார் பூங்கா திடலில் நடந்த தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
புகைப்பட கண்காட்சி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் வேலூர் பெரியார் பூங்கா திடலில் நேற்று முதல் வருகிற 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி நடந்த தொடக்க விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட அரங்குகளை பார்வையிட்டனர்.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து வருவாய்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைதுறைகளின் சார்பில் 28 பயனாளிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவி, தையல் எந்திரம், முதியோர் உதவித்தொகை என்று ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகளிர் சுயஉதவிக்குழுக்களை கொண்டு தெருவோர உணவகம் போன்ற அமைப்பில் சிறுதானியம், பல்சுவை உணவுடன் கூடிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
தமிழக அரசின் திட்டங்களை...
கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புதுறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, சுற்றுலாத்துறை, தோட்டக்கலைதுறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஆவின் பாலகம், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சி மூலம் தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து பயன் அடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வேலூர் தாசில்தார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.