அரசு வழங்கிய பொங்கல் பணத்தை தொலைத்த மூதாட்டிக்கு தனது சொந்த பணத்தை வழங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

அரசு வழங்கிய பொங்கல் பணத்தை தொலைத்த மூதாட்டிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் சொந்த பணத்தை வழங்கினார்.

Update: 2023-01-13 23:16 GMT

அந்தியூர்

அரசு வழங்கிய பொங்கல் பணத்தை தொலைத்த மூதாட்டிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் சொந்த பணத்தை வழங்கினார்.

பொங்கல் பரிசு

தமிழக அரசு அறிவித்தபடி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலையொட்டி ரூ.1000, கரும்பு, சர்க்கரை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. வசதி குறைந்தவர்கள் இந்த பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அந்தியூர் 1-வது வார்டை சேர்ந்த குப்பம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு வாங்கினார்.

மூதாட்டி கண்ணீர்

சிறிதுநேரம் கழித்து அவர் திரும்பி வந்து ரேஷன் கடை ஊழியர்களிடம் நான் பணம் வாங்காமல் சென்றுவிட்டேன் என்று வருத்தத்துடன் கூறினார். ஊழியர்கள் நாங்கள் பணம் தந்துவிட்டோம். நீங்கள் வழியில் எங்காவது தொலைத்துவிட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு குப்பம்மாள் இல்லை என்று வேதனைப்பட்டார். இதையடுத்து ஊழியர்கள் மற்றவர்களுக்கு தரவேண்டிய பணத்தை கணக்கு பார்க்கிறோம். அதில் கூடுதலாக இருந்தால் உங்கள் பணத்தை தருகிறோம் என்றார்கள். அதனால் கணக்கு பார்க்கும் வரை மூதாட்டி கண்ணீர் விட்டபடி ரேஷன் கடையிலேயே உட்கார்ந்து இருந்தார்.

பாராட்டு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் நாங்கள் கணக்கை சரிபார்த்து விட்டோம். வாங்காத மற்றவர்களுடைய பணம்தான் இருப்பில் உள்ளது. மூதாட்டி பணத்தை எங்கோ தெரியாமல் தொலைத்து இருப்பார் என்று கூறினார்கள். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தன் சொந்த பணத்தில் ரூ.1000 ரூபாயை மூதாட்டியிடம் கொடுத்து, பத்திரமாக பணத்தை கொண்டு சென்று, மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுங்கள் என்றார். பணம் கிடைத்த நிம்மதியில் குப்பம்மாள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, ரேஷன் கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியை பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்