பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்ம சாவு மகனிடம் போலீசார் தீவிர விசாரணை

குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவர்களின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-08-08 12:49 IST

குன்றத்தூர்,

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈவிபி டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 83). இவருடைய மனைவி ஜெய்பார்வதி (72). இருவரும் மகன் சக்திவேலுடன் வசித்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாகவும், வீட்டில் பெற்றோர் மட்டும் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சக்திவேல், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தந்தை கணேசன் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்த நிலையிலும், தாய் ஜெய்பார்வதி நாக்கை கடித்தபடியும் இறந்து கிடப்பதை கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த கணவன், மனைவி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மகன் சக்திவேலிடம் நடத்திய விசாரணையில் வீட்டிற்கு 2 சாவி இருப்பதாகவும், காலையில் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்ததுடன், வீட்டுக்குள் தாய்-தந்தை இறந்து கிடந்ததாக தெரிவித்தார்.

போலீசார் இந்த வழக்கை மர்ம சாவாக வழக்குப்பதிவு செய்து அவரது மகனே பெற்றோரை கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் முன்விரோதத்தில் கொன்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டிற்குள் கணவன், மனைவி இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்