மோகனூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update:2023-03-24 00:15 IST

மோகனூர்:

தூத்துக்குடியில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கியதை கண்டித்து மோகனூரில் அரசுபள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து 2-ம் வகுப்பு மாணவனின் உறவினர்கள் தலைமை ஆசிரியை குருவம்மாள், இடைநிலை ஆசிரியர் பரத் ஆகியோரை தாக்கினர். இதை கண்டித்து மோகனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அருள் முருகன் வரவேற்றார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் கணேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் மாதேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கற்றல், கற்பித்தல் பணி

ஆர்ப்பாட்டத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கியதை கண்டித்தும், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவது போல், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி மட்டுமே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசுதேவன், அத்தப்பன், அண்ணாதுரை மற்றும் மோகனூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிதிக்காப்பாளர் சசி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்