அரசு சிமெண்டு ஆலை கருத்து கேட்பு கூட்டம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு

நெரிஞ்சிகோரை கிராமத்தில் அரசு சிமெண்டு ஆலை கருத்து கேட்பு கூட்டம் நடத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-06 21:51 GMT

அரசு சிமெண்டு ஆலை

அரியலூரை அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்டு ஆலை புதுப்பாளையம் பகுதிகளில் சிமெண்டு ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கற்களை வெட்ட கடந்த 1996-ம் ஆண்டு 320 விவசாயிகளிடம் சுமார் 300 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது. அப்போது, நிலத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி கிராம மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏக்கருக்கு ரூ.13 லட்சம் வழங்க உத்தரவிட்டனர். ஆனால், ஆலை நிர்வாகம் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளது.

மக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில், இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) நெரிஞ்சிகோரை கிராமத்தில் சுரங்கம் தோண்டும் பணிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை அரசு சிமெண்டு ஆலை நிர்வாகம் நடத்த இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த புதுப்பாளையம், காட்டுப்பிரிங்கியம், வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, அஸ்தினாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு பந்தல் அமைக்க பொருட்களை ஏற்றிவந்த லாரியை முற்றுகையிட்டு கோர்ட்டு அளித்த தீர்ப்பின் படி வட்டியுடன் தொகையை வழங்கி விட்டு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், அங்குள்ள அரசு பள்ளியில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அப்பகுதிமக்கள், கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி வட்டியுடன் தொகையை வழங்கி விட்டு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தலாம் என தெரிவித்தனர்.

பரபரப்பு

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறினர். இதில், சமாதானம் அடைந்த கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையின் போது அரசு சிமெண்டு ஆலை நிர்வாகிகள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்