ஆண்டிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-31 20:30 GMT

ஆண்டிப்பட்டியில் நேற்று மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியதுடன், வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அப்போது ஆண்டிப்பட்டியில் இருந்து சொந்த கிராமங்களுக்கு செல்லமுடியாமல் ஏராளமான பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மேலும் அவர்கள் நீண்ட நேரம் ஆண்டிப்பட்டியில் காத்திருந்தனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றி உடனடியாக போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாயைலில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர்க்கால அடிப்படையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் தேனி-மதுரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்