இளமின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-25 18:40 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டு கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் மின்வினியோகம் செய்யப்படவில்லை. குறைந்த மின்அழுத்தம் காரணமாக மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மூங்கில்துறைப்பட்டு இள மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதோடு, சீரான முறையில் மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், உங்களது கோரிக்கை குறித்து அதிகாரியிடம் மனு கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். அதன்படி பொதுமக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்