பேச்சு என்ற பெயரில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க. அரசு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பா.ம.க. தார்மீக ஆதரவளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-22 17:06 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவுக்கும், அரசு ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்துள்ளன. அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால் ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. இப்படி ஒரு நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், அரசு ஊழியர் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் இந்த சிக்கலுக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை கடந்த அக்டோபர் மாதமே அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்தன. அப்போதே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை தி.மு.க. அரசு செய்யவில்லை.

அதன்பின்னர், நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், டிசம்பர் மாதம் 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டன. வரும் 27-ம் நாள் வேலைநிறுத்த மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த மாதமும், நடப்பு மாதமும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்களை ஒடுக்கி பணிய வைக்கலாம் என்று நினைத்த தி.மு.க. அரசு, அது முடியாத நிலையில்தான் இப்போது பேச்சு நடத்த அழைத்தது.

சென்னையில் நடந்த பேச்சுகளில் எந்த வாக்குறுதியையும் அரசு அளிக்கவில்லை. பேச்சுகளின் விவரத்தை முதல்-அமைச்சரிடம் தெரிவித்து, அரசின் முடிவை பொங்கலுக்குள் தெரிவிப்பதாக அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும். ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கைவிடச் செய்வதற்காகவே பொங்கலுக்குள் முடிவை தெரிவிப்பதாக அரசு கூறியுள்ளது. தி.மு.க. அரசின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்ள விரும்பாத அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய தி.மு.க. அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த தி.மு.க. அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை ஏமாற்றும் வகையில் கடந்த 24.02.2025-ம் நாள் 4 அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சு நடத்தியது. அப்போதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறிய அரசு ஊழியர்கள், அதன் 10 மாதங்களாக அரசு ஊழியர்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. அரசு ஊழியர்கள் மீண்டும், போராட்டம் அறிவித்ததால்தான் அவர்களை ஏமாற்றும் வகையில் மீண்டும் பேச்சு நடத்தி ஏமாற்றியுள்ளது.

அரசு வாங்கிய கடனுக்கு ஆண்டுக்கு ரூ.70,503 கோடி வட்டி கட்ட வேண்டியிருப்பதால்தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று இன்றைய பேச்சுகளின்போது அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். அரசின் கடனும், வட்டியும் அதிகரித்ததற்கு காரணம் தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும்தான். அதற்கான தண்டனையை அவர்கள்தான் அனுபவிக்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்களுக்கு தண்டனை அளிக்கக் கூடாது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. காலவரையற்ற போராட்டத்தால் அரசின் சேவைகளும், மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதமாக அரசு ஊழியர்கள் அதை கையில் எடுத்திருப்பதால் அதற்கும் பா.ம.க. தார்மீக ஆதரவளிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. செய்த தொடர் துரோகங்களுக்கான பரிசு வரும் தேர்தலில் கிடைக்கும் படுதோல்விதான். புதிய அரசு அமைந்த பின் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்