கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பஸ்சில் அழைத்து வந்தபோது புழல் சிறை கைதி தப்பி ஓட்டம்

கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பஸ்சில் அழைத்து வந்தபோது புழல் சிறை கைதி தப்பி ஓடினார். கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு மாயமானவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-22 20:42 GMT

விழுப்புரம்,

இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் அப்துல் முஸ்தபா. இவரது மகன் ரியாஸ்கான் ரசாக் (வயது 39). இவர் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் சுற்றித்திரிந்தார். அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மதுரை தெற்கு வாசல் போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்றி ரியாஸ்கான் ரசாக் மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. எனவே ரியாஸ்கான் ரசாக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக 4 போலீஸ்காரர்கள் புழல் சிறையில் இருந்து மதுரை கோர்ட்டுக்கு பஸ்சில் அழைத்து சென்றனர். அங்கு விசாரணை முடிந்ததும் மீண்டும் அவரை பஸ்சில் அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பேரணி கூட்டுரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு 8.45 மணிக்கு பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது ரியாஸ்கான் ரசாக்கையும் போலீசார் ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது அவர், இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை அங்குள்ள கழிவறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.

கைதி தப்பி ஓட்டம்

நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதில் சந்தேகமடைந்த போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவரை காணவில்லை. அப்போதுதான் தங்களை ஏமாற்றிவிட்டு ரியாஸ்கான் ரசாக் தப்பி ஓடியது போலீசாருக்கு தெரிந்தது.

உடனே இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விடிய, விடிய அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர் சிக்கவில்லை. தொடர்ந்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்