தேனி அருகே பலத்த காற்றுடன் மழை:1,500 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன:விவசாயிகள் கவலை

தேனி அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 1,500 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-04-22 18:45 GMT

தென்னை விவசாயம்

தேனி அருகே புதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டக்குடி ஆற்று பாசனம் மூலம் வாழை, கரும்பு, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இதில் ஆதிபட்டி, காக்கிவாடன்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் ¾ மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பூதிப்புரம் சன்னாசி கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த தென்னை மற்றும் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுமார் 1,500 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் 4 மின் கம்பங்களும் முறிந்தன.

சாய்ந்த மரங்கள்

இதையடுத்து தேனி மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து முறிந்து விழுந்த கம்பங்களை சீரமைத்தனர். இதையடுத்து நேற்று காலை போடி தாசில்தார் அழகுமணி, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரகுமார் ஆகியோர் மழையால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து தென்னை சாகுபடி செய்த விவசாயி ஒருவர் கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளேன். தென்னை மரங்கள் நடவு செய்து 20 வருடங்கள் ஆகின்றன இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் 150 விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 1,500 தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே முறிந்த விழுந்த மரங்களுக்கு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்