எஸ்.ஒகையூரில்ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

எஸ்.ஒகையூரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

Update: 2023-09-14 18:45 GMT


தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் இருந்து தேரடி வரை ஓடை ஒன்று செல்கிறது. இந்த ஓடையை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.

இதனால் மழைக்காலங்களில் ஓடையின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் கடந்த 3- முறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

இந்நிலையில் நேற்று நில அளவையர் வேல்முருகன், விஜயசாந்தி ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஓடை பகுதியை அளவீடு செய்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், செந்தில் முருகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் புவனேஸ்வரி சுரேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தெய்வீகம் மற்றும் வருவாய்த் துறையினர் பலரும் உடன் இருந்தனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்