பொது வழியில் கட்டப்பட்ட சுவர் அகற்றம்
குடியாத்தம் அருகே பொது வழியில் கட்டப்பட்ட சுவர் அகற்றப்பட்டது.;
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி கள்ளூர் அடுத்த கிருஷ்ணாநகர், முல்லை நகருக்கு செல்லும் வழியில் சீவூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனிமபர் ஒருவர் சுவர் கட்டி உள்ளார். அப்பகுதி மக்கள் கேட்டபோது கொரோனா என்பதால் வெளி ஆட்கள் வராமல் இருக்க சுவர் எழுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை சுவரை அகற்றவில்லை.
இதனைத் தொடர்ந்து ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என். இர்ஷாத்அலி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், உத்தரவின்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கடராமன், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பொது பாதையில் கட்டப்பட்டுள்ள சுவர் குறித்து ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினர்.
அதன் பேரில் அந்த சுவரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மாலை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.திருமலை, எம்.கார்த்திகேயன், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம் ஜி.சுரேஷ்குமார், துணை தலைவர் அஜீஸ், வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் ரகு உள்ளிட்டோர் முன்னிலையில் அந்த சுவர் முற்றிலும் அகற்றப்பட்டது.