பால் வியாபாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை,பணம் கொள்ளை

பால் வியாபாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை,பணம் கொள்ளை;

Update:2023-07-25 01:00 IST

சிங்காநால்லூர்

கோவை சிங்காநல்லூரில் பால் வியாபாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால் வியாபாரி

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் செங்குட்டை தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). பால் டீலர் எடுத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்வத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கமாக வெளியே வைக்கும் இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதனை மறைந்து இருந்த கவனித்த மர்ம நபர், அந்த சாவியை எடுத்தார்.

பின்னர் அந்த மர்ம நபர் அந்த சாவியை பயன்படுத்தி வீட்டின் கதவை திறந்து உள்ளே அலமாரியில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்தார். பின்னர் மீண்டும் வீட்டை பூட்டி விட்டு சதாசிவம் சாவியை வைக்கும் அதே இடத்தில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

கண்காணிப்பு கேமரா

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சதாசிவம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த உடைமைகள் சிதறி கிடந்தது. மேலும் அலமாரியில் இருந்த ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சதாசிவம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பெண் ஒருவர் சதாசிவம் வைத்து விட்டு சென்ற சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து, வீட்டின் கதவை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் யார்?, கோவையை சேர்ந்தவரா? அல்லது வேறு மாவட்டம் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்