இளநீர் விற்பனை படுஜோர்

இளநீர் விற்பனை படுஜோராக நடந்தது.;

Update:2023-06-11 00:15 IST

பனைக்குளம்,

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கோடைகாலம் தொடங்கும். குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும். இந்த ஆண்டும் கடந்த மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. இருப்பினும் தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் இளநீர், பழஜூஸ், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்டவைகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடல் வெப்பத்தை தணிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இளநீர்தான். இதனால் மக்கள் அதிகளவில் இளநீர் குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் இளநீரின் விலையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வாலாந்தரவை பஸ் நிறுத்தம் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்யும் முனியசாமி கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளாக இளநீர் வியாபாரம் செய்கிறேன். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் இளநீர் வியாபாரமும் நன்றாக உள்ளது. ஆனால் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. வாலாந்தரவை, உச்சிப்புளி, அரியமான், பாம்பன், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீரை வாங்கி விற்பனை செய்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் இளநீருக்கு தட்டுப்பாடாக உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் பொள்ளாச்சி பகுதியில் இருந்தும் கொண்டு வரப்படும் இளநீரையும் வாங்கி விற்பனை செய்கின்றேன். ஒரு இளநீர் ரூ.50-க்கு விற்பனை செய்கிறோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்