சாமி சிலையை சேதப்படுத்தியதால் பரபரப்பு
கமுதி அருகே கருப்பண்ணசாமி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கமுதி,
கமுதி அருகே கருப்பண்ணசாமி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமி சிலை சேதம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொட்டக்குளம் கண்மாய் கரையில் 400 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கருப்பண்ணசாமி சிலையின் இடது பக்க கையை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர். நேற்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி கருப்பையா சாமி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் சாமி சிலை சேதப்படுத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். இதையடுத்து சாமி சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாமி சிலை முன்பு அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அபிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து ெசன்றனர். சாமி சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோவில் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை உள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.