சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-06 18:45 GMT

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வேடசந்தூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க தலைவர் வெள்ளத்தாய் தலைமை தாங்கினார். சங்க முன்னாள் செயலாளர் ராஜலிங்கம் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வருவாய்கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750-ஐ வழங்கவேண்டும். தமிழ்நாடு அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களில் 50 சதவீதம் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்காமல் சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

வேடசந்தூர் ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் நடராஜன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட தலைவர் தியாகராஜன் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வேடசந்தூர் ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்க பொருளாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

இதேபோல் பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மங்களபாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்