அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடம் ஜப்தி

தாராபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்து கிரையம் பெற்றவரிடம் சொத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர்.;

Update:2023-08-29 23:07 IST

தாராபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்து கிரையம் பெற்றவரிடம் சொத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி கட்டிடம் விற்பனை

தாராபுரத்தில் போலீஸ் குடியிருப்பு பகுதி எதிரே செல்லும் சாலையில் செல்லமுத்து நினைவு அறக்கட்டளை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராக சரஸ்வதி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்ததால் பள்ளியை நடத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பள்ளியை மேற்கொண்டு நடத்த தாராபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி மயிலாத்தாள் என்பவருக்கு பள்ளித்தாளாளர் சரஸ்வதியும் அவரது மகன் பார்த்திபன் தொண்டைமான் என்பவரும் சேர்ந்து 5 சென்ட் நிலத்தில் செயல்படும் பள்ளி கட்டிடத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்துள்ளனர்.

ஜப்தி நடவடிக்கை

மயிலாத்தாள் விற்பனை ஒப்பந்தம் எழுதிக்கொடுத்தபடி மீதி தொகையை கொடுத்து விடுவதாக கூறியிருந்தார். இதற்கிடையில் அதன் பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பள்ளி தாளாளர் சரஸ்வதி இறந்து விட்டார். பிறகு ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பள்ளி கட்டிடத்தை கிரையம் செய்து கொடுக்கும்படி சரஸ்வதி மகன் பார்த்திபன் தொண்டைமானிடம் மயிலாத்தாள் கேட்டார். ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் மயிலாத்தாள் கொடுத்த கடனை வட்டியுடன் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சரஸ்வதி மகன் அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை, நிலத்தையும் தராததால் மயிலாத்தாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது. கடனை திருப்பி செலுத்தக்கோரி ஐகோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அதனை பின்பற்றாமல் பள்ளி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வந்தது.

இதையடுத்து மீண்டும் மயிலாத்தாள் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மீதி தொகையை செலுத்தி கிரையம் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தர்மபிரபு பள்ளியை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பள்ளி இடம் ஜப்தி செய்யப்பட்டது.

மாணவர்களின் நிலை

இதனால் அங்கு படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்