விக்கிரவாண்டி அருகே ஆற்றுப் பாலத்தில் மோதி ஆம்னி பேருந்து விபத்து - 35-க்கும் மேற்பட்டோர் காயம்

அதிவேகமாகச் சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.;

Update:2025-12-20 09:28 IST

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று ஆற்றுப் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

முன்னதாக ஆம்னி பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் இன்று அதிகாலையில் விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், பேருந்தில் பயணித்த 35-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், டிரைவர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்