திருவள்ளூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 3 வயது சிறுவனை பாம்பு கடித்தது

திருவள்ளூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது 3 வயது சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-08 13:51 GMT

3 வயது சிறுவன்

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அடுத்த அணைக்கட்டுப் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 30). இவர் வசிக்கும் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று இடம் கேட்டு நேற்று அஜீத்குமார் திருவள்ளூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு 3 வயது குழந்தை பிரவீன் குமாருடன் வந்தார்.

பாம்பு கடித்தது

சப்-கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அலுவலக வாசலில் காத்திருந்தபோது அஜீத்குமாரின் 3 வயது குழந்தை அலுவலக வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த வளாகத்தின் புதரில் இருந்து வந்த பாம்பு ஒன்று 3 வயது குழந்தை பிரவீன் குமாரை கடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அஜீத்குமார் தன் குழந்தையை உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பாம்பு கடித்தது குறித்து திருவள்ளூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தியணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர்.

பின்னர் 3 வயது சிறுவனை கடித்தது விஷத்தன்மை வாய்ந்த சாரை பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை பத்திரமாக காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்